லலித் அத்துலத்முதலி (1936 -1993)
கனவாளர்/ தொலைநோக்குடையவர்/ சரித்திர நாயகன்
பிள்ளைப்பருவமும் கல்வியும்
லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி, சனாதிபதி சட்டத்தரணி, லலித் அத்துலத்முதலி என பஜரபலமானவர். இவர் களுத்தறையில் உள்ள சட்டத்தரணிகள் குடும்பத்தில் 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தையாரின் பெயர் டீ.டீ. அத்துலத்முதலி, இவர் இலங்கை அரச பேரவையின் உறுப்பினராக இருந்தார். தாயார் டோனா எலிசியானா பெரேரா வீரசிங்க. இவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டுபேர். ஒரு சகோதரர் தயானந்த, இவர் ஒரு பொறியியலாளர். ஒரு சகோதரி சுஜி. இவர் மருத்துவர்.
லலித் அத்துலத்முதலி தன்னிகரற்ற அரசியல்வாதியாகவும் சிறந்த கல்விமானாகவும் திகழ்ந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியில் கற்றார். பின்னர் பாணதுற புனித ஜோன்ஸ் கல்லூரியல் கல்வி பயின்று தொழில் புரிவதற்கு முன்னர் 1942ஆம் ஆண்டு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். சிறந்த கல்விமானாகத் திகழ்ந்த காலத்தில் லலித் அத்துலத்முதலி ஷேக்ஸ்பியர் பரிசு மற்றும் ஸ்டுவர்ட் பரிசு உட்பட 20க்கு மேற்பட்ட பாடசாலை பரிசுகளை வென்றுள்ளார். இற்றைவரை இது தன்னிகரற்ற சாதனையாக இருக்கின்றது. மேலும் அவர் 1952ஆம் ஆண்டு அகில இலங்கை அரச பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் வீரனாகத் தெரிவுசெய்யப்பட்டார். தடைதாண்டி ஓடும் போட்டியில் முப்பதைந்து ஆண்டுகளுக்கு மேலாக அகில இலங்கை அரச பாடசாலை சாதனையாளராகத் திகழ்ந்தார்.
கல்வி மற்றும் சட்ட தொழில்
1955ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் ஜீசஸ் கல்லூரியில் அவருடைய சட்டக் கல்வி ஆரம்பமானது. 1958ஆம் ஆண்டு சட்டவியல் கல்லூரியில் கலைமானி (BA) கௌரவ பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஒக்ஸ்போர்ட்டில் பட்டப்பின்படிப்பு கல்வியைத் தொடர்ந்தார். 1959ஆம் ஆண்டு அவருடைய தந்தையார் காலமானார். நிதி வசதி போதாமையால் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய நிலையைக் கேள்விப்பட்ட எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, இலங்கை அரசாங்க புலமைப்பரிசை வழங்கினார். 1959ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட்டில் சட்டவியலுக்கான லோர்ட் ஷென்கி பரிசை வென்றார். 1960ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் முதுமானி (MA) பட்டத்தையும் சிவில் சட்ட இளமானி (BCL) பட்டத்தையும் பெற்றார். அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த காலத்தில் நூலக பொறுப்பாளராக, செயலாளராக (1956), பொருளாளராகத் (1957) தெரிவுசெய்யப்பட்டார். 1958ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இந்த கௌரவமான பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட முதல் இலங்கையாராக இவர் திகழ்ந்தார். 1962ஆம் ஆண்டு புலமைப்பரிசு பெற்று ஹார்வார்ட் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1963ஆம் ஆண்டு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானி (LLM) பட்டம் பெற்றார். அங்கு அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் நிரந்தர சேரிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், அவர் 1964ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். இலங்கையில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்து தனது சட்டப் பணிகளை ஆரம்பித்தார். 1967 முதல் 1974 வரை இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டவியல் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். 1985ஆம் ஆண்டு அவர் சனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.
லலித் எந்த மொழியிலும் உரையாற்றும் திறமை பெற்றிருந்தார். அது அவருடைய செய்தியை அறிவிக்க இலகுவானதாக இருந்தது. அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சிறந்த அறிவுடையவராக இருந்ததார். ஆனால் அவர் ஏனைய பல மொழிகளைப் பேசக்கூடியவர் என்பது ஒருசிலருக்கு மாத்திரமே தெரியும். ஒரு முறை ஜேர்மனியில் நடந்த நிகழ்ச்சியொன்றின்போது பிரதான உரை நிகழ்த்திய லலித் ஜேர்மன் மொழியில் சரளமாக உரையாற்றினார். அதைக் கேட்டு சபையோர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். உரைபெயர்ப்பாளர்கள் ஜேர்மன் மொழியை ஆங்கிலத்தில் உரைபெயர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த மொழியாக இருந்தாலும் அவர் சுவைபட கேட்போர் பாராட்டும் விதத்தில் சரளமாகப் பேசினார்.
அரசியல் வாழ்க்கை
லலித் அத்துலத்முதலி 1970ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் அரசியலில் பிரவேசித்தார். அவர் 1973ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை திட்டமிடல் குழுவில் இணைந்துகொண்டார். அவர் 1977ஆம் ஆண்டு இரத்மலாண தேர்தல் தொகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன அவரை அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக நியமித்தார். அவர் 1977 முதல் 1991 வரை வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு, உணவு மற்றும் கூட்டுறவு மற்றும் கால்நடை அபிவிருத்தி, விவசாயம், கல்வி மற்றும் உயர் கல்வி உள்ளிட்ட பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.
லலித் அவருடைய காலப்பகுதியில் சட்டத்துறையில் பிரகாசித்தார். ஆனால் அவருடைய துறைக்கு சம்பந்தமில்லாத வர்த்தக அமைச்சும் பின்னர் அதனோடு சேர்க்கப்பட்ட கப்பற்றுறை பொறுப்புக்களும் சனாதிபதி சட்டத்தரணியான லலித் அத்துலத்முதலியிடம் ஒப்படைக்கப்பட்டது. லலித் அத்துலத்முதலி இலங்கை துறைமுக அதிகார சபையையும் இலங்கை துறைமுக விரிவாக்க கருத்திட்டத்தையும் நிர்மாணித்தவராகக் கருதப்படுகின்றார். நாட்டின் பிரதான இடம் வகித்த துறைமுகம் இந்த நாட்டுக்கு ஆற்றிய பாரிய பங்களிப்பை உணர்ந்துகொண்ட அவர் அதன் ஆக்கத்திறன்பற்றிய செயல் நோக்கத்தைக் கொண்டிருந்தார். எனவே கொழும்பு துறைமுகத்தை தெற்காசிய பிராந்தியத்தில் பிரதான பொருளாதார துறைமுகமாக மாற்ற வேண்டியதன் அவசியம்பற்றி உணர்ந்திருந்தார். அவருடைய செயல் நோக்கும் சிறந்த தலைமைத்துவமும் 1980ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அமைச்சர் என்ற வகையில் அவருடைய பதவிக் காலத்தின் முடிவில் கொழும்புத் துறைமுகம் உலக தரத்தில் 136வது இடத்திலிருந்து 24வது இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. கொழும்புத் துறைமுகத்தை பிராந்தியத்தில் முன்னணி துறைமுகமாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு அதன் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பித்தார். நாட்டின் துறைமுக நடவடிக்கைகளுக்காக ஒரு சுயாதீன நிறுவனமாகவும் ஒரே நிறுவனமாகவும் உருவாக்குவதற்காக அதன் அதிகரித்த பணிகளையும் இரட்டிப்பு பணிகளையும் மேற்கொள்ளுவதற்காக துறமுக சரக்கு கூட்டுத்தாபனத்தை இணைத்து கொழும்பு துறைமுக ஆணைக்குழுவும் துறைமுக இணை மற்றும் பாதுகாப்பு சேவைகள் கூட்டுத்தாபனமும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) என ஒரு நிறுவனமாக இணைக்கப்பட்டது. அந்த வகையில் 1979 ஆகஸ்ட் மாதம் லலித் அத்துலத்முதலியின் அறிவாற்றலால் இலங்கை துறைமுக அதிகாரசபை அமைக்கப்பட்டதை அடுத்து கொழும்பு துறைமுக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது. அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து செயலாற்றி கொழும்பு துறைமுகத்திற்கு கப்பற் சரக்கு பரிமாற்றும் மற்றும் கொள்கலன் இறங்குதுறை வியாபாரத்தையும் அறிமுகப்படுத்தினார். அத்துடன் குயீன் எலிசபெத் இறங்குதுறை மற்றும் விஜய இறங்குதுறை ஆகிய இரண்டு இறங்குதுறைகளை நவீனமயப்படுத்தும் பணிகளையும் பொறுப்பேற்றார். 1973ஆம் ஆண்டு முதன் முதலாக கொழும்பில் கொள்கலன்களைக் காணக்கூடியதாக இருந்தது. லலித் அவர்களின் பதவிக் காலத்தில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜயா கொள்கலன் இறங்குதுறை (JCT) இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமாக இருந்ததோடு அது அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தது.
மேலும் துறைமுக ஊழியர்களுக்காக அவர் மகாபொல தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை உருவாக்கினார். இருபது வருடங்களாக பாதி கட்டப்பட்டிருந்த சைத்திய துறைமுக பணி லலித் அவர்களின் வழிகாட்டலில் பூர்த்திசெய்யப்பட்டது.
குயீன் எலிசபெத் இறங்குதுறையை விரிவாக்குவதற்காக கொழும்பு துறைமுக ஆணைக்குழுவினால் 1960ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட பல்பொருள் வியாபார மேடையை அமைக்கும் பணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபை ஏற்றுக்கொண்டது. நிதி பற்றாக்குறை காரணமாக ஒரு கருத்திட்டம் என்ற வகையில் அது நிறைவேறாமல் தோல்வியடைந்தது. 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேடை 1980ஆம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகாரசபையின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக வர்த்தக கப்பற்றுறை அமைச்சர் என்ற வகையில் லலித் அத்துலத்முதலி அவர்களின் அழைப்பை ஏற்று சனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
கொழும்பு துறைமுகம் 1980ஆம் ஆண்டு சுமார் 41,622 இருபது சம அலகுகளாக (TEU) கையாண்டது. உலகத்தில் கொள்கலன்களைக் கையாள்கின்ற துறைமுகங்களில் 139வது இடத்தை வகிக்கிறது. பத்தாண்டுகள் முடிவில் சுமார் 628,485 இருபது சம அலகுகளைக் கையாண்டு உலகில் 26வது இடத்தைப் பெற்றுள்ளது. திறமையான இளம் அமைச்சர் என்ற வகையில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சியின் கீழ் லலித் பிரதான பாத்திரத்தை வகித்தார். இவர் சட்டங்களை இயற்றுவதற்காக அழைக்கப்பட்டார். உலகத்தின் ஏனைய பகுதிகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளுவதற்கு கதவைத் திறந்துவிடுவதற்கு புதிய பொருளாதார முறைமைக்கு புதிய சிந்தனைகளையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல் என்பவற்றிற்கு அவருடைய பங்களிப்பு வேண்டப்பட்டது. அதுவரைக்கும் அது நாட்டில் மூடிய பொருளாதாரமாகவே இருந்தது.
ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துமுகமாக, லலித் அத்துலத்முதலி அவர்களால் கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு ஏற்றுமதியாளர் ஊடாக கிராமங்களில் உற்பத்தியாளர்களுக்கு சந்தையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு ஏற்றுமதி உற்பத்தி கிராமங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி திட்டம் லலித் அவர்களின் எண்ணக்கருவாகும். மேலும் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தை (CWE) விரிவுபடுத்தினார். நாட்டில் நெருக்கடியான நிலை ஏற்படும்போது போதியளவு உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு களஞ்சியசாலை எண்ணக்கருவை லலித் அறிமுகப்படுத்தினார்.
1984ஆம் ஆண்டு அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பொலிஸ் இராணுவம் இரண்டிலும் மறுசீரமைப்பை ஆரம்பித்தார். அவருடைய பதவிக் காலத்தில் இராணுவத்தின் எண்ணிக்கை 6,000லிருந்து 24,000 வரை அதிகரிக்கப்பட்டு இராணுவம் விரிவுபடுத்தப்பட்டதோடு இராணுவ உபகரணங்களும் வழங்கப்பட்டன. அவருடைய நடவடிக்கைகளில் மிகவும் முரண்பட்டதாக இருந்த விடயம் இஸ்ரேலின் உதவியைக் கோரியதாகும். வடமராட்சி நடவடிக்கை உட்பட எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பல தடுப்பு நடவடிக்கைகளை ஒழுங்குசெய்தார். அத்துடன் இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்த்தார்.
1987ஆம் ஆண்டு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கடுமையான காயங்களுக்குள்ளானார். அவருடைய அரசியல் செயற்பாடுகளில் மிகப்பெரிய தடை 1988 மே மாதம் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சிக்காரர்களுடன் யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தியபோது அவருக்கு ஏற்பட்டது. யுத்த நிறுத்தம் என்ற சொல்லப்படுவதன் பிரதான தரகர்களாக கெலி சேனாநாயக்க என்று அழைக்கப்படுகின்ற ஒரு சட்டத்தரணியும் அருட்பிதா திஸ்ஸ பாலசூரியவும் இருந்தார்கள். பிற்காலத்தில் அவருக்கு மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பணிப்பாணை இருக்கவில்லை என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. 1988ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சு கிடைத்தது. 1988ஆம் ஆண்டு ஜெயவர்தன ஓய்வு பெற்றதை அடுத்து அரசாங்கத்தில் அவருடைய நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. சனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பு மனுவைப் பெற முயற்சித்தார். ஆனால் ரணசிங்க பிரேமதாச சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இவர் தோல்வியடைந்தார்.
குடும்பம்
லலித் அத்துலத்முதலி அவருடைய மனைவி ஸ்ரீமணி த சேரம் அவர்களை 1978ஆம் ஆண்டு அவர் சுவிட்சர்லாந்து UNCTAD இல் இணைந்திருந்தபோது சந்தித்தார். ஸ்ரீமணி லலித்துடைய சகோதரனான தயானந்த அத்துலத்முதலியின் நண்பியாக இருந்தார். லலித் அத்துலத்முதலியும் ஸ்ரீமணியும் சில வருடங்கள் காதலித்ததன் பின்னர் 1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெனீவாவில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு செரெலா அத்துலத்முதலி என ஒரு மகள் இருக்கின்றாள்.
லலித் அத்துலத்முதலி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ஸ்ரீமணி அத்துலத்முதலி அவருடைய கணவரால் ஸ்தாபிக்கப்பட்ட DUNF கட்சியை முன்னெடுத்து நடத்தினார். இவர் 1994ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். எவ்வாறாயினும் அவருடைய மகள் செரெலா தயார் அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை ஒருபோதும் ஊக்கப்படுத்தவில்லை. அவர் இலங்கைப் பெண் அரசியல்வாதியாக இருந்தார். விஜேதுங்கவின் அமைச்சரவையில் சூழலியல், போக்குவரத்து மற்றும் மகளிர் விவகார அமைச்சராக செயலாற்றினார். அவர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி சுகப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
மகாபொல புலமைப்பரிசு நிகழ்ச்சித்திட்டம்
லலித்தின் எதிர்காலத்திற்கான நோக்கு அவரை மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. மகாபொல புலமைப்பரிசு நிகழ்ச்சித்திட்ட எண்ணக்கரு, இலங்கையின் வறிய மாணவர்களுக்கு சந்தர்ப்பமளிக்கின்ற பாதையைத் திறந்துவிடுகின்ற எண்ணக்கருவாகும். இது தொலைநோக்குள்ள ஒரு அரசியல்வாதியின் மிகவும் முன்மாதிரியான பங்களிப்பாகும்.
ஒரு நாடு அதன் பிள்ளைகளின் கல்வியை அலட்சியப்படுத்தினால் அந்த நாடு துன்பப்படும் என்பதை லலித் அத்துலத்முதலி அறிந்திருந்தார். பல்கலைக்கழக கல்வி வரைக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டாலும் உயர் கல்வியைப் பெறுவதில் வறுமை தடையாக இருக்கின்றது என்பதை அவர் அறிந்திருந்தார். பட்டப்படிப்பை மேற்கொள்ளுகின்றவர்களுக்கு சாப்பாட்டிலிருந்து பிரயாணம் வரைக்கும் ஒவ்வொரு மாணவனும் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதுவே மகாபொல புலமைப்பரிசு நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது. மேலும் லலித் அத்துலத்முதலி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அரசாங்கத்திலிருந்து பெற்ற உதவியை ஒருபோதும் மறக்கவில்லை. எஸ்.டப்ளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு முழுமையான புலமைப்பரிசு வழங்கப்பட்டிருந்தது. அவர் அமைச்சரவைக்கு முன்மொழிந்து பட்டப்படிப்பை மேற்கொள்ளுகின்ற பணத் தேவையுள்ள மாணவர்களுக்கு லொத்தர் மூலம் நிதியுதவியளிக்கும் ஒரு நிதியத்தை உருவாக்கினார்.
இரண்டாம்நிலை கல்வியையும் உயர் கல்வியையும் தொடர்வதற்கு நிதி உதவி தேவைப்படுகின்ற தகுதியுள்ள மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை விருத்திசெய்யும் நோக்கில் 1981ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் லலித் அத்துலத்முதலி தனது தனிப்பட்ட பங்களிப்பை வழங்கி மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை ஸ்தாபித்தார். இந்த நிதியம் 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது. இந்த சட்டத்தின் 3ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் அதன் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடு என்பவை நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நிதியத்தின் நோக்கமும் குறிக்கோளும் வருமாறு,
- இளைஞர்களுக்கு உயர் கல்வி வசதிகளை அளித்தல்.
- இரண்டாம் நிலைக் கல்வியை திருப்திகரமாகப் பூர்த்திசெய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு உதவி வழங்குவதன் ஊடாக, அவர்கள் அவர்களுடைய கல்விசார், கைத்தொழில் அல்லது தொழில்நுட்ப கல்வியை பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்ப அல்லது உயர் கல்வி நிறுவகத்தில் பூர்த்திசெய்யக்கூடியதாக இருக்கும்.
- இளைஞர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தொழில் ஆற்றல்களையும் திறன்களையும் விருத்திசெய்துகொள்ளக்கூடிய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவகங்களை அமைத்து முகாமைப்படுத்துவதற்கு உதவுதல்.
- கல்விக்கு மேலதிகமான விடயங்களில் ஈடுபடுகின்ற பாடசாலைகள், கல்வி நிறுவகங்கள், மன்றங்கள் மற்றும் அதையொத்த நிறுவகங்கள் என்பவற்றை நடத்துவதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் உதவுதல்.
- கல்விக்கு மேலதிகமான விடயங்களில் ஈடுபடுகின்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ளுவதற்கும் விருத்திசெய்துகொள்ளுவதற்கும் உதவியளித்தல்.
1981ஆம் ஆண்டு பண்டாரவெல, கலென்பிந்துனுவௌ என்ற இடத்தில் நடத்தப்பட்ட முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் 400 மாணவர்களுக்கு புலமைப்பரிசு வழங்கி ஆரம்பிக்கப்பட்ட மகாபொல புலமைப்பரிசின் பயன்களை இன்று 90% மான பல்கலைக்கழக மாணவர்கள் அனுபவிக்கின்றார்கள். வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பவற்றில் சேவையாற்றுகின்ற ஊழியர்கள் காலஞ்சென்ற அமைச்சரின் நோக்கை யதார்த்தமாக்குவதற்கு தம்மை ஆகக்கூடியளவில் அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றுகின்றனர். இன்று மகாபொல நிதியம் ஏனைய சில திட்டங்களைச் சேர்ந்த மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றது என நம்பப்படுகின்றது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் வங்கி வங்கியாகச் சென்று கடன் பெற்ற மாணவர்கள் இன்று காலஞ்சென்ற அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குறிப்பிடத்தக்க பரிசை தகுதிபெற்ற மாணவாகள் இலங்கையர்கள் என்ற வகையில் அந்த நன்றியை மறக்கவில்லை.
1981 முதல் 2016 வரையிலான 35 ஆண்டுகாலப்பகுதியில் அனைத்து 15 பல்கலைக்கழகங்கள், ஏனைய உயர் கல்வி நிறுவகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் என்பவற்றின் மாணவர்களுக்கு 13.3 பில்லியன் ரூபா பெறுமதியான 288,893 புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்பொழுது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் வருடாந்தம் 15,000க்கு மேற்பட்ட புலமைப்பரிசுகளும் தொழில்நுட்ப கல்லூரிகளின் 1,500 மாணவர்களுக்கும் புலமைப்பரிசு வழங்கப்படுகின்றது.
சரித்திர நாயகன்
லலித் அத்துலத்முதலி போன்ற அரசியல்வாதிகள் மிகவும் அபூர்வமானவர்கள். அரசியல்வாதிகள் ஊழல் மிக்கவர்களாக, இனவாதிகளாக, பக்கச்சார்புடையவர்களாக, வெளிவேஷம் போடுபவர்களாக இருக்கின்றனர். லலித் அத்துலத்முதலி இவையனைத்தையும் நீக்கியவராக இருந்தார். இன்றுள்ள இளம் அரசியல்வாதிகள் லலித் அவர்களின் வாழ்க்கையையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்க விரும்பினால் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். எல்லா அரசியல்வாதிகளைப் போன்று லலித்தும் இரத்மலான வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக கடுமையாக வேலைசெய்தார். ஆனால் அவருடைய ஈடுபாட்டுக்கு அப்பால் கவனம் செலுத்தும் ஆற்றல் அவருக்கிருந்தது. அவர் முழு நாட்டையும் அணுகினார். அவர் உண்மையிலேயே தேசியமட்ட அரசியல்வாதியாவார்.
மேலும் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் லலித் அத்துலத்முதலி மிகவும் கௌரவமான அரசியல்வாதியாகக் கருதப்பட்டார். அவர் இன்னும் பல இலங்கையர்களால் ஒணர சிறந்த கனவானாகவும் அந்தக் காலகட்டத்தில் இருந்த சிறந்த கல்வியறிவுடைய அரசியல்வாதியாகவும் நினைவுகூரப்படுகின்றார். அவரைக் கௌரவிக்குமுகமாக அவருக்கு கொழும்பில் ஒரு சிலையும் நினைவாலயமும் எழுப்பப்பட்டுள்ளது. நாட்டின் கல்விக்கு அவர் வழங்கிய பங்களிப்பு மகத்தானது. அவர் உறுவாக்கிய மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியம் நிதி தேவையுள்ள மாணவர்களின் உயர் கல்வி அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்வதோடு வருடாந்தம் புலமைப்பரிசுகளையும் வழங்குகின்றது. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் லலித் அத்துலத்முதலி கேட்போர் கூடமும் வருடாந்தம் கொழும்பு றோயல் கல்லூரியில் வழங்கப்படுகின்ற லலித் அத்துலத்முதலி ஞாபகார்த்த பரிசும் (அவர் பெயரிலான தர்மம்) (றோயல் கல்லூரியின் சிறந்த மாணவனுக்கான விருது) அவரைக் கௌரவிக்குமுகமாக அவர் பெயரில் இயங்குகின்றது.
அவர் கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி பரவியவுடன் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு வணக்கஸ்தலத்திலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அவருடைய இறுதிக் கிரியை நடைபெற்ற பொரளை பொது மயானத்தில் எதிர்பாராதளவு பெரும் கூட்டம் கூடியிருந்தது. அவர் பிரியாவிடை பெற்றபோது இலட்சக்கணக்கான மக்கள் சிந்திய கண்ணீர் அவர் அந்த மக்களின் இதயங்களில் என்றும் குடிகொண்டிருக்கின்றார் என்பதை எடுத்துக்காட்டியது. மகாபொல புலமைப்பரிசுக்கு நன்றி கூறும் ஆயிரக்கணக்கான பட்டதாரி மாணவர்ளின் மனங்களில் அவருடைய தொலைநோக்கு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. குறைந்தபட்சம் அவர்களில் சிலராவது தன்னலம் பாராத அர்ப்பணிப்புடனும் சளைக்காத சுறுசுறுப்புடனும் அவருடைய பாதச் சுவடுகளைப் பின்பற்றி இலங்கைச் சமுதாயத்திற்கு சேவையாற்றினால் லலித் அத்துலத்முதலியின் அகால மரணம் வீணாய்ப்போகாது.
தொலைநோக்கில்லத, கருத்துக்கள் இல்லாத, தேசிய ஆர்வம் இல்லாத வெறுமனே வாழ வேண்டும் என்பதற்காக மலிவான புகழுக்காக செயலாற்றுகின்ற இன்றைய அரசியல்வாதிகள் லலித் அத்துலத்முதலியின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். துரதிர்ஷடவசமாக 1993ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 23ஆம் திகதி கிருலப்பனையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிதாரியொருவனின் துப்பாக்கி சூட்டினால் அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது.