முதலாவது புலமைப்பரிசு வழங்கும் வைபவம் 1981ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. அங்கு 422 மாணவர்களுக்கு புலமைப்பரிசு வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு வரை சுமார் 280,000 புலமைப்பரிசுகள் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசு வழங்கும் வைபவம் வருடாந்தம் நடைபெறுகின்றது. ஆரம்பத்திலிருந்தே கொழும்பு மாவட்டத்தில் மாணவர்களுக்கு புலமைப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு மகாபொல புலமைப்பரிசு நம்பிக்கை பொறுப்பு நிதிய செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டு கொழும்பில் நடத்தப்பட்டது. அதேநேரத்தில் ஏனைய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசு வழங்கும் நிகழ்வு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்களினால் ஒழுங்குசெய்யப்பட்டன.
2012ஆம் ஆண்டிலிருந்து புலமைப்பரிசு வழங்கும் வைபவம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டன. எவ்வாறாயினும் மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியம் (MTF) தற்பொழுது மாவட்ட செயலகங்களுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து மாவட்ட மட்டத்தில் வைபவங்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் 2017/18 கல்வி ஆண்டுக்கான புலமைப்பரிசு வழங்கும் வைபவம் விரைவில் நடத்தப்படவிருக்கின்றது.
திறமை அடிப்படையில் புலமைப்பரிசு பெறுகின்றவர்களுக்கும் சாதாரண புலமைப்பரிசு பெறுகின்றவர்களுக்கும் ஒரு கல்வி ஆண்டில் மாதாந்தம் முறையே ரூ. 5,050/- மற்றும் ரூ. 5,000/- வீதம் குறித்துரைக்கப்பட்ட பாடநெறியின் காலப்பகுதிக்கு அமைவாக ஆகக்கூடியதாக பத்து தவணைகளில் செலுத்தப்படுகின்றது. தவணைப் பணம் மாணவனின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படும். அத்துடன், மாணவர்களுக்கு அப்பணச் செலுத்தீடுபற்றி குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்படும்.